சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை மத்திய அரசின் நெருக்கடியின் கீழ் பணியாற்றி வருவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அஷோக் கெலாட், மத்திய விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவை பாகுபாடு இன்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டியவை என்றார். ஆனால், தற்போது இந்த அமைப்புகள் கடும் நெருக்கடியின் கீழ் பணியாற்றுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
அமலாக்கத்துறைக்கு விசாரணை நடத்தவும், பறிமுதல் செய்யவும், கைது செய்யவும் அதிகாரம் இருப்பதாக மத்திய அரசு தனது உத்தரவில் தெரிவித்திருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டார். தங்களுக்கு மட்டுமல்லாது லட்சக்கணக்கான நாட்டு மக்களுக்கும் இந்த தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக அவர் கூறினார்.
நாட்டில் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம் என அவர் குறிப்பிட்டார்.








