நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பெட்ரோல் ரூ. 10 மற்றும் டீசல் ரூ. 14 நஷ்டத்தில் விற்கப்பட்டதாக ஐஓசி தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேஷன் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பெட்ரோலை 10 ரூபாய் நஷ்டத்திலும் டீசலை 14 ரூபாய் நஷ்டத்திலும் விற்றது தற்போது தெரிய வந்துள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் இந்த காலாண்டில் இழப்பைச் சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ரூ. 5,941.37 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதனோடு ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,992.53 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு முதல் காலாண்டில் 24.648 மில்லியன் டன் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த காலகட்டத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு 18.936 மில்லியன் டன்னாக இருந்ததாகவும் ஐஓசி தெரிவித்துள்ளது.









