மேற்கு வங்கத்தின் கொல்கட்டாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். மத்திய அரசின், ‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் என்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய், ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய 3 அதிநவீன கப்பல்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த 3 அதிநவீன போர்க் கப்பல்களையும் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஒரே நேரத்தில் வெவ்வேறு திறன்களைக் கொண்ட 3 முன்னணிக் கப்பல்கள் கடற்படையில் இணைக்கப்படுவது இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய சாதனை ஆகும். இந்த கப்பல்கள், கடற்சார் போர், நீரியல் அளவீடு, நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர் ஆகிய துறைகளில் முக்கிய செயல்பாட்டு திறன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் இந்த கப்பல்களின் கட்டுமானத்தில் 75 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டு பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடற்படையில் புதிய கப்பல்களை சேர்ப்பது இந்தியாவின் வளர்ந்து வரும் தன்னிறைவுக்கான சான்றாகும். கடல்சார் வலிமை இல்லாமல் எந்தவொரு நாடும் ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்க முடியாது. கப்பல் கட்டும் துறையில் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா முன்னேறி வருகிறது. கடல்சார் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.




