சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி -ஆளுநர், முதலமைச்சர் வரவேற்பு!

இரண்டு நாள் பயணமாக  பிரதமர் நரேந்திர மோடி சற்று முன் சென்னை விமான நிலையம்  வருகை தந்தார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு, இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள…

இரண்டு நாள் பயணமாக  பிரதமர் நரேந்திர மோடி சற்று முன் சென்னை விமான நிலையம்  வருகை தந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டுக்கு, இரண்டு நாள் பயணமாக தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பேகம்பட் விமான நிலையத்தில் இருந்து தனி விமான மூலம் சற்று முன் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்,ரவி , அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கனிமொழி எம்பி.,  ஆர்.ராசா எம்பி  மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு  Gandhi’s Travels in Tamilnadu என்ற புத்தகத்தை  பரிசளித்தார்.

அப்போது, ஐம்பெரும் தமிழ்  காப்பியங்களில் ஒன்றான “மணிமேகலை” புத்தகத்தை கொடுத்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் வரவேற்றார். 

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி பழைய விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக் கொண்டு கார் மூலமாக சென்னை விமான நிலையத்தில் 2400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை பார்வையிட்டு திறந்து வைக்க புறப்பட்டு சென்றார்.

அங்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பன்னாட்டு ஒருங்கிணைந்த முனையத்தை திறந்து வைத்த உடன் விமான நிலையத்தில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று சென்னை-கோவை இடையே முதன்முறையாக வந்தேபாரத் சேவையை துவக்கி வைக்கிறார்.

அதனை முடித்துக் கொண்டு அங்கிருந்து சாலை மார்கமாக விவேகானந்தர் இல்லம் சென்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மீண்டும் அடையார் ஐஎன்எஸ் சென்று ஹெலிகாப்டர் மூலம் பல்லாவரம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார்.

பின்னர் பல்லாவரம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்னை பழைய விமான நிலையம் சென்று தனி விமான மூலம் மைசூர் புறப்பட்டு செல்கிறார். நாளை அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு புறப்பட்டு செல்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.