தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடி அயோத்திக்கு வருகை தருவதை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பண்டிகைகள் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா தளர்வுகள் எதுவும் இல்லாமல் மீண்டும் பழைய நிலைமையில் தீபாவளி பண்டிகையை மக்கள் அனைவரும் கொண்டாட உள்ளனர்.
இதையடுத்து நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை களைக்கட்ட தொடங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகருக்கு செல்கிறார். மாலை 5 மணியளவில் அங்குள்ள பகவான் ராம் லாலாவை பிரதமர் வழிபடுகிறார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த தலத்தை அவர் ஆய்வு செய்கிறார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகளையும் அவர் ஆய்வு செய்கிறார். 6.30 மணியளவில் சரயு நதியின் புதிய படித்துறையில் ஆரத்தி நிகழ்ச்சியை பார்வையிடுகிறார். பிரம்மாண்டமான தீப உற்சவ கொண்டாட்டத்தையம் அவர் தொடங்கி வைக்கிறார். 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தீபங்கள் கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
தீபாவளி பண்டிகையில் பங்கேற்க பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு அயோத்தியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை மற்றும் பிரதமர் மோடியின் வருகையையொட்டி அயோத்தி நகரம் ஒளி நிறைந்து காணப்படுகிறது.







