மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நாளை பதிலளிப்பார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கோஷத்துக்கு ஆளுங்கட்சியும் பதில் கோஷம் எழுப்பி வருகின்றன. இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.
இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் வன்முறை சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. பிரதமர் மோடி பதிலளிக்காத நிலையில், பாஜக அரசுக்கு எதிராக, மக்களவையில் ஜூலை 26 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நேற்றும் இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த மக்களவை உறுப்பினர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த திருமாவளவன் உள்ளிட்ட பலர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து பேசினர். அவதூறு வழக்கில் தகுதிநீக்கத்துக்கு ஆளாகி, உச்சநீதிமன்ற உத்தரவின் படி மீண்டும் நாடாளுமன்றம் வந்த ராகுல் காந்தி மத்திய அரசு மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதற்கு பாஜகவை சேர்ந்த அமித்ஷா, ஸ்மிர்தி இராணி உள்ளிட்ட பலர் பதில் அளித்து பேசியதோடு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன் என எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தன.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதங்கள் மக்களவையில் நிறைவுபெற்றன. இதையடுத்து, தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி நாளை பதிலளிப்பார் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.




