ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அணி அசத்தியுள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் இறுதி லீக் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஏற்கனவே ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி மற்றும் மலேசியா அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
நடப்பு சாம்பியன் தென்கொரியா 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் ஜப்பான் 2 டிரா, 1 வெற்றி, 3 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. சீனா 1 டிரா , 3 தோல்வியுடன் 1 புள்ளியுடன் கடைசி இடம் பிடித்து வாய்ப்பை இழந்தது.
அரை இறுதியில் நுழைவதற்கான எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் தென் கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய 3 அணிகளும் இருந்தன. இந்நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இறுதி லீக் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடங்கி வைத்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி பாகிஸ்தானை 4-0 என்ற கோள் கணக்கில் வீழ்த்தி வெற்றியை தன்வசப்படுத்தியது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 13 புள்ளிகள் பெற்று இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜப்பானை அரையிறுதி போட்டியில் சந்திக்கிறது இந்தியா. அதே போல அன்றைய தினமே மலேசிய அணி கொரியாவை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.







