மணிப்பூர், ஹரியானா மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாட்டிலுள்ள சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மக்களவை உறுப்பினர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களவையில் மத்திய அரசு மீது கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்று பேசினார்.
அப்போது, திருமாவளவன் பேசியதாவது:
மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தேன். அதில் இரு தரப்பு மக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும், பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. அதுமட்டுமல்லாது மணிப்பூர் மாநில மக்கள் அம்மாநில அரசு மீது மட்டும்மல்ல, மத்திய அரசு மீது தங்கள் நம்பிக்கையை இழந்திருப்பதாக கூறினர். இந்நிலையில், எதிர்கட்சிகளும் நம்பிக்கையை இழந்திருக்கிறோம். அங்கு 150-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவியும் அங்கே மானபங்கப்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த நாட்டை காப்பாற்ற முடிந்த தன்னால் தனது மனைவியை காப்பாற்ற முடியவில்லை என அந்த ராணுவ வீரர் கூறியது உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தலைகுணிவை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை இன்று நாடு இழந்து நிற்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இன்று நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். சொந்த மண்ணிலேயே இந்நாட்டின் மக்கள் அகதிகளாக மாறி நிற்கும் நிலை இந்நாட்டிற்கு தலைகுணிவை ஏற்படுத்தியிருக்கிறது.
பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்லவலம் நடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமையை நடத்தியிருக்கிறார்கள். இதற்காக இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வரியில் ”இது கண்டிக்கத்தக்கது” எனக் கூறிவிட்டு பிரதமர் தனது வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த அவைக்கு பிரதமர் மோடி வரவேண்டும் என கட்டாயப்படுத்தி அழைக்கக் கூடிய வகையில் எதிர்கட்சிகள் இந்த தீர்மானத்தை கொண்டுவரும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதே, இந்த அரசின் மீதான நம்பிக்கை போய்விட்டது என்பதை எடுத்துகாட்டுகிறது.
அதுமட்டுமல்லாது நாட்டில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அரசு தரப்பின் ஆயுதங்களே கொள்ளை போயுள்ளது. குறிப்பாக மைதி இன மக்களே அந்த ஆயுதங்களை கொள்ளை அடித்ததாக அம்மாநில அரசே கூறியுள்ளது. அப்படி கொள்ளை அடிக்கப்பட்ட ஆயுதங்களை மீட்க, இச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மணிப்பூர் ஆளுநரை சந்தித்து இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அவர் மத்திய அரசின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக கூறினார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றைக்கும் அங்கே மக்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை.
மணிப்பூர் மட்டுமில்லை, ஹரியானாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. அவர்கள் தேடி தேடி இஸ்லாமியர்களை படுகொலை செய்கிறார்கள்.
விஸ்வ இந்து பரிஷக்த், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் வெளிப்படையாக சிறுபான்மையின மக்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கிறார்கள். நாங்கள் இங்கே இந்து ராஷ்டிரத்தை அமைப்போம், இஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும் அழித்து ஒழிப்போம், அதற்காகவே இங்கு ஆயுதம் ஏந்துகிறோம் என்று வெளிப்படையாக அவர்கள் பேசுகின்ற அவலம் தலைவரித்தாடுகிறது.
குஜராத், ஹரியானா மட்டுமல்ல ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே காவலர் ஒருவர் இஸ்லாமியர் 3 பேரை சுட்டுக்கொன்றிருக்கிறார். அதுமட்டுமல்லாது பிரதமர் மோடிக்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் அந்த ரயில்வே போலீஸ் முழக்கமிட்டிருக்கிறார். ஆக நாட்டில் என்ன நடக்கிறது. சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லை. குறிப்பாக இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் அஞ்சி அஞ்சி வாழக்கூடிய அவலம் நிலவுகிறது.
தலித் மக்களுக்கும் பாதுகாப்பில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நாடு முழுவதும் பெண்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட தலித் விரோத அரசின் மீது பழங்குடி மக்கள் விரோத அரசின் மீது, இஸ்லாமிய, கிறிஸ்துவ விரோத அரசின் மீது இன்று ஒட்டுமொத்த நாடே நம்பிக்கை இழந்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, இந்து பெரும்பான்மை மக்களுக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கையில்லை.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாயை கார்ப்ரேட் நிறுவனங்களுக்காக இந்த அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் அதே பெரும்பான்மை இந்துக்களாக இருக்கக்கூடிய சாமானிய மக்கள் பயன்படுத்தக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்திருக்கிறது. தக்காளி இன்று 200, 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இதிலே பாதிக்கப்படுகிறவர்கள் பெரும்பான்மை இந்து சமூகத்தினர் தான். ஆகவே இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, இந்து பெரும்பான்மை மக்களுக்கும் எதிராக இருக்கிறது.
கர்நாடகாவில் இந்து மக்கள் தான் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸை ஆள வைத்திருக்கிறார்கள். ஆக ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கையை இழந்திருக்கிற இந்த அமைச்சரவை மீது, பிரதமர் மோடி தலைமையிலான இந்த அமைச்சரவையின் மீது நான் எனது நம்பிக்கையின்மையை தெரிவிக்கிறேன். எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களுக்கான இட ஒதுக்கீடு நிரப்பப்படவில்லை. அவர்களுக்கான கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. திட்டமிட்டே ஸ்காலர்ஷிப்பை நிறுத்தி இஸ்லாமிய மக்களின் கல்வியை தடுக்கிறார்கள். அதேபோல காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை நிரப்ப இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் இந்த அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரவேற்கிறேன். இவை அனைத்திற்கும் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திரமோடி பதவி விலக வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.







