வரும் 28ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44-வது சர்வதேச “செஸ் ஒலிம்பியாட்” போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டி வரும் ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள “போர் பாயிண்ட்ஸ்” அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா 28ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் போட்டிகளை தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார்.
மேலும் கடந்த ஜூலை 19ஆம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து . அழைப்பிதழை வழங்கினர்.
இதையடுத்து பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா, அண்ணா பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவர் சென்னை வருவதாக பிரதமர் அலுவலக வட்டராத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.







