பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அதிக உற்பத்தி செலவின் காரணமாக, பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவினின் “கிரீன் மேஜிக்” பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அப்பால் பாக்கெட்டுகள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.
4.5% கொழுப்புச் சத்து கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் விநியோகம் ஒருவேளை தடைபடுமானால், இதே அளவு கொழுப்புச் சத்து கொண்ட பாலை மக்கள் கூடுதல் விலை கொடுத்து தனியாரிடம் இருந்து வாங்கும் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுவர். இதனால் பால் நுகர்வு குறைவதோடு குழந்தைகள், முதியோர்கள் உள்ளிட்டவர்களின் ஆரோக்கியமும் பாழாகும். நடுத்தர மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்நடவடிக்கை ஏற்புடையதல்ல.
எனவே, ஆவின் பாலின் கொழுப்புச் சத்து அளவைக் குறைப்பது, உற்பத்தியை முடக்குவது, விநியோகத்தை தடைபடுத்துவது, விலையை உயர்த்துவது உள்ளிட்ட முந்தைய அரசின் தவறுகளை, தற்போதைய தவெக அரசும் தொடரக் கூடாது. மக்களின் அடிப்படைத் தேவையான பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் விநியோகம் தடையின்றி நடக்கவும், அவற்றின் உற்பத்தியை பெருக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஜோசப் விஜய்யை வலியுறுத்துகிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




