இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் பருவ நிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசுகிறார். உலக நாடுகள் அனைத்தின் பார்வையும், பிரிட்டனில் உள்ள கிளாஸ்கோ நகர் மீதுள்ளது. ஏனெனில், அங்குதான் அக்டோபர் 31-முதல் நவம்பர் 12-ஆம் தேதி வரையில் ‘சி.ஓ.பி.26’ என்று அழைக்கப்படுகின்ற, சம்மந்தப்பட்ட தரப்புகளின் மாநாடு என்ற பெயரில் பருவநிலை மாற்றம் பிரச்சினை தொடர்பான ஐ.நா. உச்சி மாநாடு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில், உலகளாவிய கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் கலந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் பொருளாதாரத்தில் வல்லரசாக உள்ள சீனாவின் அதிபர் ஜின்பிங்கும், ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதினும் இதில் நேரடியாக கலந்து கொள்ளவில்லை என்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
2015-ஆம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாடு உருவாக்கப்பட்டது. இந்த உடன்பாடு, 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம்தேதி கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், கரியமில வாயு உள்பட பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதின் மூலம் உலகமெங்கும் வெப்ப நிலை உயர்வை கட்டுப்படுத்துவதுதான். அதாவது வெப்ப நிலையை 2 டிகிரி செல்சியசுக்கு கீழாக கட்டுப்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் உறுதிமொழி அளித்துள்ளது.
தற்போது உலகளாவிய வெப்ப நிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்படியே போனால் 2100-ல் இது 2.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சென்று விடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிளாஸ்கோவில் நடைபெறுகிற பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் பாரீஸ் உடன்பாட்டின் விதிகள் உறுதி செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
மாநாட்டின் தலைவரான இந்திய வம்சாவளியை சேர்ந்த அலோக் சர்மா கூறுகையில், “உலக வெப்ப நிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கு குறைவாக கட்டுப்படுத்த பாரீஸ் பருவநிலை உடன்பாட்டில் கையெழுத்து போட்ட நாடுகள் உறுதி அளித்துள்ளன. இதன் இலக்கு, 1.5 டிகிரியாகும். நாம் உடனடியாக செயல்படாவிட்டால் இந்த 1.5 டிகிரி இலக்கு எட்ட முடியாமல் போய்விடும். 1.5 டிகிரி செல்சியஸ் என்ற இலக்கு நீடிக்க, 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய உமிழ்வை பாதியாக குறைத்தாக வேண்டும். இப்போது இதற்கான அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது” என அலோக் சர்மா தெரிவித்தார்.
அறிவிக்கப்பட்டபடி, நேற்று கிளாஸ்கோவில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு தொடங்கியது. தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பலியானவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்துமாறு முந்தைய மாநாட்டின் தலைவரான சிலி நாட்டைச் சேர்ந்த கரோலினா ஸ்மிட் கேட்டுக்கொண்டார். அதையடுத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இந்த மாநாட்டில் தலைவர்கள் பேசுவதற்கு முன்பாக அதிகாரிகள் நடைமுறை விஷயங்களைப் பேசத்தொடங்கினர்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, நேற்று ரோமில் இருந்து கிளாஸ்கோவுக்கு புறப்பட்டார். மாநாட்டில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருக்கு முன்பாக பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசுகிறார். பிரதமர் மோடி பேசுகிறபோது, இந்தியாவின் பருவநிலை மாற்ற செயல் திட்டத்தை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








