வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள் ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்தநிலையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, பெரம்பலூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக, நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








