ஹைட்ரஜன் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

அரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலைப் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்கும் வகையில், முழுக்க முழுக்க புதிய தொழில்நுட்பத்தில் இந்த ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மண்டல ரயில்வேவுக்காக 140 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் தொடங்கிய நிலையில், சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டு வந்தன. இந்த ரயிலுக்கான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்ததை அடுத்து, ரயில் சேவையை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில் அரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயிலில் 2,800 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரியானாவின் ஜிந்த்-சோனிபட் இடையே அதிநவீன ஹைட்ரஜன் ரயில் சேவை இன்று முதல் இயக்கப்படுகிறது. டீசல் ரயில்களுக்கு மாற்றான ஹைட்ரஜன் ரயிலில் இருந்து நீரும், நீராவியும் மட்டுமே கழிவாக வெளியேறும். 10 பெட்டிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரயில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் செல்லும் திறனுள்ளது.

மேலும் ஹைட்ரஜன் கசிவுகள், வெப்பம், தீப்பிழம்புகள், புகையை முன்கூட்டியே கண்டறியும் பன்முக பாதுகாப்பு அமைப்புகளுடன் பாதுகாப்பான ரயில் என்ற சிறப்பையும் ஹைட்ரஜன் ரயில் கொண்டுள்ளது. இந்தியாவில் தற்போது 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட அகல ரயில் பாதை வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டு உள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.