எகிப்து நாட்டின் “ஆர்டர் ஆப் தி நைல்” என்ற உயரிய அரசு விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்து சென்றடைந்த பிரதமர் மோடிக்கு நேற்று கெய்ரோ விமான நிலையத்தில் ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று கெய்ரோவில் உள்ள 1000 ஆண்டு பழமையான அல் ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட பிரதமர் மோடிக்கு பின்னர் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து முதலாம் உலக போரில் போரிட்டு, உயிர் தியாகம் செய்த 4000 இந்திய வீரர்களுக்காக அமைக்கப்பட்ட ஹீலியோபோலிஸ் போர் கல்லறைக்கு பிரதமர் மோடி நேரில் சென்றார். அங்கு, உயிர் நீத்த வீரர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, பின்னர் எகிப்து அதிபர் அப்தல் பட்டா எல் சிசியை சந்தித்து பேசினார்.
இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்திய நிலையில், இருநாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய அரசு விருதான ஆர்டர் ஆப் தி நைல் விருதை அதிபர் எல் சிசி வழங்கி கௌரவித்தார்.







