திராவிட சித்தாந்தத்தில் எத்தனையோ கொள்கைகள் இருந்தாலும், அதில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுவது என்னவோ பெண் உரிமைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தான். அது அன்றைய பெரியார் காலம் தொட்டு, இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகின்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரை தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதோடு, பெண்களுக்காக பல பல புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொதுவாக யாரையாவது ஒருவரை ரோல் மாடலாக வைத்துக்கொண்டு வளர்ச்சி பெறுவது என்பது எல்லோருடைய வாழ்விலும் நடக்கும் செயல்தான். அதே போல சிலருக்கு நாம் யாரை ரோல் மாடல்களாக வைத்து இருக்கின்றோம் என்பதே அவர்களுக்கே சில நேரம் தெரியது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்படியல்ல. சிறுவயதில் இருந்தே தன் தந்தையின் கையை பிடித்து நடக்க பழக ஆரம்பித்ததில் தொடர்ந்து, 60-வயதை கடந்த பிறகும் அவரை மட்டும் தான் தன் வாழ்நாளின் ரோல் மாடலாக நினைத்து வாழ்ந்தார், வாழ்ந்து கொண்டிருக்கிறார். காரணம் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தான் முதல் ரோல் மாடலாக இருப்பார்கள் அல்லவா.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள பல திட்டங்கள் அவரது தந்தை பயணித்த வழித்தடத்தின் சுவடுகளை பின்பற்றியே செயல் வடிவம் பெற்று வருகிறது என்பது நிதர்சனமான உண்மை. அதில் குறிப்பாக பெண்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள, கொண்டுவரப்பட்டுள்ள ஒவ்வொரு திட்டங்களிலும் தந்தையின் சிந்தனையை போலவே ஒரு தாயுணர்வு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும் இருப்பது நமக்கு தெரியும். தற்போது தமிழகத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முதலமைச்சர், அவர்களுக்காக செய்திருக்கின்ற திட்டங்கள் என்னென்ன என்பதை பார்ப்பதற்கு முன்பாக, அவர் ரோல் மாடலாக நினைத்து இன்றுவரை அவர் வழி நடக்கின்ற மறைந்த டாக்டர் மு.கருணாநிதி செய்திருக்கின்ற திட்டங்கள் என்னென்ன என்பதை முதலில் பார்ப்போம்.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 2023-ஆம் ஆண்டுடன் 55 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது . திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்பது எண்ணிலடங்காதவை. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி, இனி எவராலும் பெண்களுக்காக இப்படியொரு திட்டங்களை செய்லபடுத்த முடியாது என்கிற அளவுக்கு தனது தலைமையிலான திமுக ஆட்சியில், திமுக கட்சியின் மூத்த பெண் தலைவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின்
நினைவாக ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை தொடங்கி வைத்தார். எத்தனை ஆட்சி மாற்றங்கள் தமிழகத்தில் நிகழ்ந்திருந்தாலும் இத்திட்டம் இன்றுவரை மிகச்சிறப்பாகவே பல பரிமாணங்களை பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் கைம்பெண்களின் மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக கைம்பெண் மறுமண நிதி உதவித் திட்டத்தையும் கொண்டுவந்தவர் கருணாநிதி தான்.
இது தவிர, அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. பெண்களுக்கான இலவசப் பட்டப் படிப்பிற்கான திட்டங்கள் போன்றவையும் கொண்டுவரப்பட்டன. மேலும் 33% பெண்களுக்கான இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு மிகவும் வெற்றி கரமாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. கர்பிணிப் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது. ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டது. 1989-ல் பெண்களுக்கு பொருளாதாரத்தில் யாரையும் நம்பாமல் சுயமாக இயங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் பெண்கள் சுய உதவிக் குழுக்கள். இதன் மூலம் தமிழகத்தில் இன்றுவரை பெண்களால் சுய தொழில்கள் அதிகம் உருவாகி வருகின்றன.
அப்படிப்பட்ட முத்தான பல திட்டங்களை பெண்களுக்காக செயல்படுத்தி காட்டி இந்திய அளவில் பேசப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு பிறகு, இனி பெண்களுக்காக யோசித்து செய்வதற்கு யார் இருக்கிறார். இனி அவ்வளவுதான். இனிமேல் பெண்களுக்காக செய்வதற்கும் ஒன்றும் இல்லை என்று பலரும் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், “அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான்” என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இதற்கு உண்மையான பொருள் என்ன தெரியுமா ?‘அப்பன்’என்றால் வெறும்‘பெற்ற தந்தை’ மட்டும் அல்ல; குழந்தைக்கு நல்லவற்றைப் போதிக்கும் அன்பு ஆசான். அவன் வளர்த்த விதம் தவறாது, பிள்ளை உதித்துள்ளான் என மெச்சும்படி பிள்ளை உள்ளான் என்பதும் ஒரு பொருள்! அப்படியாக தந்தையின் பெயரை காப்பாற்றும்படி அவர் வழி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் தந்தை வழி நின்று தமிழ்நாட்டு பெண்களுக்காக யோசித்தார். யோசித்ததோடு நின்று விடாமல் அதை செயல்படுத்தியும் காட்டி வருகிறார்.
தந்தையை விட என்ன செய்துவிட்டார்? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. ஆனால் உண்மையில் பெண்களுக்காக அவர் செய்திருக்கும், செய்து வரும் திட்டங்கள் ஏராளம். 2021-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்தார். அதில் குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் ,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம், கணவனை இழந்த அல்லது பிற சமூக மற்றும் குடும்ப காரணங்களுக்காக தனியாக உள்ள பெண்களுக்கும் குடும்ப அட்டை வழங்குதல், மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தள்ளுபடி, அரசுப் பணிகளில் மகளிருக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தியது, அதிமுக அரசு பெண்களுக்கு வழங்கி வந்த திருமண உதவித் திட்டத்தை உயர்கல்வி உறுதித் திட்டமாக அறிவித்தது, தேர்தலின்போது பெண்களுக்கு உரிமைத் தொகையாக ரூ. 1,000 மாதம்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு பதிலாக படிக்கும் குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்து, இவற்றில் பெரும்பாலானவற்றை செயல்படுத்தியும் காட்டியுள்ளார்.
குறிப்பாக தமிழகத்தில் 60 சதவீதப் பெண்கள் வேலைக்குச் செல்கின்றனர். அதை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையிலும் உள்ளூர் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்தது பலரது பாராட்டையும் பெற்றது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற திட்டமாகும். இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் மாதம்தோறும் ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரை செலவை மிச்சப்படுத்தப்படுத்த முடிகிறது என்று மகிழ்ச்சியுடன் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்படி தந்தைக்கு மிஞ்சிய தமையனாக, அரசியல் களத்தில் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையிலும் பெண்களை மதித்து நடக்க கூடியவர் நம் தமிழ்நாடு முதலமைச்சர் என்பதற்கு பல நிகழ்வுகள் சான்றாக உள்ளன. அதில் மிக முக்கிய உதாரணமாக நாம் சொல்ல வேண்டும் என்றால் இன்றும் பல பெண்களுக்கு ரோல் மாடலாக, தமிழகத்தின் சிங்கப்பெண்ணாக, தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக பார்க்கப்படும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், தனிப்பட்ட முறையில் உள்ள விருப்பு வெறுப்புகளை தாண்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரிடம் காட்டிய அவை அடக்கத்தையும், தனடக்கத்தையும் ,பெண்களை எந்த அளவிற்கு மதித்து நடக்கிறார் என்பதையும் பல நிகழ்வுகளில் இருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். அதற்கு உதாரணமாக கலைஞர் கருணாநிதியின் வயது மூப்பிற்கு பிறகு துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என்று மொத்த பொறுப்புகளையும் கையில் எடுத்த பிறகு, எத்தனையோ தருணங்களில் ஜெயலலிதாவை நேருக்கு நேராக அருகில் இருந்து கேள்வி கேட்க கூடிய சூழல்கள் இருந்த போதிலும், ஒருமுறை கூட, அவரிடம் அநாகரீக மற்ற முறையில் நடந்துகொண்டதோ, தவறாக பேசியதோ கிடையாது.
அதேபோல்தான், தந்தை கருணாநிதியோடு பயணித்த ஸ்டாலின் கட்சியில் எத்தனையோ பெரிய பொறுப்புகளை வகித்திருந்தாலும் முதன் முதலில் சென்னை மாநகராக மேயராக பொறுப்பேற்று அதை சிறப்பாக செயல்படுத்திய போதுதான் அவரது முழுமையான ஆளுமைத்திறன் பலருக்கும் தெரிய வந்தது. அப்பேற்பட்ட பதவிக்கு, பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நடத்தப்பட்ட உள்ளாட்சி தேர்தல் முடிவில் திமுக பெரும்பான்மையாக வெற்றிபெற்று சென்னை மாநகர மேயராக யாரை போடுவார்கள் என்ற பேச்சு எழுந்த பொழுது ,அதில் பெரும்பாலானவர்களின் கருத்து ஒரே மாதிரியானதாக இருந்தது. அதுவும் அவரது மகன் உதயநிதிக்குத்தான் மேயர் பதவியை ஸ்டாலின் வழங்கப்போகிறார் என்று சில அரசியல் சிக்கல்களோடு எல்லோரும் சிந்தித்துக்கொண்டிருந்த வேளையில் , தமிழ்நாடே பார்த்து ஆச்சர்யப்படும் விதமாக ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, கட்சியில் அடிமட்ட தொண்டராக இருந்து வந்த பிரியா என்கிற ஒரு சிறுவயது பெண்ணை சென்னை மாநகர மேயராக தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த செயல் அன்று பலரையும் ஆச்சர்யப்பட வைத்ததோடு, பலரிடம் பாராட்டையும் பெற்றது.
இப்படியான பெண்களை மதிக்கும் குண நலன்களை கொண்ட ஸ்டாலின் அரசியல், வெளியுலக வாழ்க்கையை தாண்டி, குடும்பத்தில் உள்ள பெண்களையும் மிகவும் மதித்து நடக்கக்கூடியவர் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளது. அதில் மிக முக்கியமான ஒன்று அவர் தன் மனைவிக்கு கொடுக்கும் பங்களிப்பு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி கட்டிலில் ஏறியதில் இருந்து இன்றுவரை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அவை எல்லாவற்றிற்கும் அவர் மனைவி துர்காவும் ஒரு காரணம் என்று பலர் விமர்சனங்களை வைத்தாலும், தன்னுடைய நல்லது, கெட்டது,வெற்றி ,தோல்வி எல்லாவற்றிற்கும் உறுதுணையாக இருக்கும் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
இது தவிர திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக பார்க்கப்படும் கடவுள் மறுப்பு கொள்கைக்கு அப்பாற்பட்டு, கடவுள் மீது அதீத பக்தி கொண்ட தன் மனைவி துர்காவை எந்த வகையிலும் நாம் கட்டுப்படுத்த கூடாது என்று இதிலும் தந்தையைப் போலவே மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டு வருகிறார்.
இது மார்ச் மாதம்… மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற மாதம்… மகளிரின் வளர்ச்சியில் அக்கறை காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளும் இந்த மாதத்தின் முதல் நாளில் தான்… தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு நியூஸ் 7 தமிழின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.