நடிகை சன்னி லியோன் நடித்துள்ள பாடலுக்கு மதுராவை சேர்ந்த பூசாரிகள் திடீர் எதிர்ப்பு தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் தமிழில், வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். இந்திப் படங்களில் நடித்து வரும் அவர், இப்போது வீடியோ ஆல்பம் ஒன்றில் ஆடியுள்ளார். கடந்த புதன்கிழமை வெளியான இந்த ஆல்பம், 1960 ஆம் ஆண்டு ’கோகினூர்’ என்ற இந்தி படத்தில் இடம்பெற்ற ’மதுபன் மெயின் ராதிகா நாச்சே’ என்ற பாடலின் ரீமிக்ஸ்.
ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள இந்த பாடலை, பிரபல இசை நிறுவனமான ‘சரிகம’ தயாரித்துள்ளது. பிரபல பாடகர்கள் கனிகா கபூர், அரிந்தம் சக்ரவர்த்தி பாடியுள்ள, இந்தப் பாடல் இந்துக்கள் புனிதமாக மதிக்கும் கிருஷ்ணா, ராதாவை இழிவு படுத்துவதாக வும் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் நெட்டிசன்கள் விளாசி வந்தனர்.
இந்நிலையில் இந்தப் பாடலுக்கு உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்த கோயில் பூசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சன்னி லியோன் ஆடியுள்ள அந்த வீடியோ பாடலை உடனடியாக நீக்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால், நீதிமன்றத்துக்கு செல்வோம் என்றும் விருந்தாபனை சேர்ந்த நவல் கிரி மகராஜ் தெரிவித்துள்ளார்.
அதோடு நடிகை சன்னி லியோன், பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் இல்லை என்றால் அவரை இந்தியாவில் இருக்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.








