குடியரசுத் தலைவர் தேர்தல் இன்று நடைபெறுவதால் புதுச்சேரி சட்டப்பேரவை முழு பாதுகாப்பில் உள்ளது.
இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையின் உறுப்பினர்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். குடியரசுத் தலைவருக்கான தேர்தல், நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றங்களிலும் நடைபெறவுள்ளது. டெல்லி செல்ல முடியாத எம்.பி.க்கள் மாநில சட்டமன்றங்களில் தங்களது வாக்குகளை செலுத்தலாம்.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலையொட்டி புதுச்சேரியில் உள்ள சட்டப்பேரவை முழு பாதுகாப்பில் உள்ளது. அலுவலகங்கள் அனைத்தும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இன்று வாக்குப்பதிவு முடிந்த பிறகு டெல்லிக்கு பாதுகாப்புடன் வாக்குப்பெட்டி எடுத்துச் செல்லப்படும். இத்தேர்தலில் நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க அனுமதியில்லை.
சட்டப்பேரவை வளாகத்தில் நாலாவது மாடியிலுள்ள கருத்தரங்க அறையில் தேர்தல் நடக்கிறது. காலை 10 முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடக்கும். சட்டசபை செயலர் அறைக்கு பக்கத்தில் உள்ள அறை ஓட்டுப் பெட்டி வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம் ஆக மாற்றப்பட்டுள்ளது. அந்த அறையின் ஜன்னல் முழுவதுமாக அடைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது 24 மணி நேரமும் காவல் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 30 நியமன எம்எல்ஏக்கள் 3 என மொத்தம் 33 எம்எல்ஏக்கள் இரண்டு எம்.பிக்கள் உள்ளனர். இத் தேர்தலில் 3 நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. எனவே 30 எம்எல்ஏக்கள் இரண்டு எம்.பிக்கள் ஓட்டுபோட வசதியாக சட்டசபையில் நான்காவது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் வாக்குச் சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடத்தை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்