குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக யார்…

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள சூழலில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் வேட்பாளராக யார் நிறுத்தப்படுவார்கள் என்ற கேள்விகள் பலமாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான எதிர்க்கட்சி வேட்பாளர் தொடர்பாக டெல்லியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

22 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக்தளம், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா, தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகள் பங்கேற்றன. அதே நேரத்தில் ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிரோன்மணி அகாலி தளம், தெலுங்கு தேசம் , பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்தன.

கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் பிரதிநிதிகளும் தங்களது தலைவரின் கருத்துக்களை விரிவாக எடுத்துரைத்தனர். இறுதியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு சரத்பவார், மல்லிகார்ஜுன கார்கே, மம்தா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “குடியரசுத் தலைவர் வேட்பாளராக சரத்பவாரை நிற்கக் கோரினோம். அவர் மறுத்துவிட்டார். ஆகவே, கட்சிகளின் தலைவர்கள் கலந்துபேசி வேட்பாளரை முடிவு செய்வார்கள். இன்னும் ஒரு வாரத்தில் பொது வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்துவிடுவோம்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.