இலங்கையில் இருந்து இன்று மாலத்தீவுக்குச் சென்ற அதிபர் கோத்தபய ராஜபக்ச, பின்னர் அங்கிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
அதிபர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் பதவி விலக வலியுறுத்தி அந்நாட்டில் கடந்த 9ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 9ம் தேதி கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்ச, ராணுவத்தின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை இலங்கையில் இருந்து மாலத்தீவு தலைநகர் மாலியில் உள்ள வெலானா சர்வதேச விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்ச வந்திறங்கினார்.
அவரோடு, அவரது மனைவியும், 2 பாதுகாவலர்களும் வந்துள்ளனர்.
மாலியில் சில மணி நேரங்கள் மட்டுமே இருந்த கோத்தபய, பின்னர் அங்கிருந்து இலங்கை விமானப் படை விமானம் மூலம் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார்.
இதனிடையே, தலைநகர் கொழும்பில் இன்றும் போராட்டம் நடைபெற்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள், அலுவலகத்தை ஆக்கிரமித்தனர்.
போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த பாதுகாப்புப் படையினர் முயன்றும், அது முடியவில்லை.
இதனையடுத்து, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு பிரதமரும் செயல் அதிபருமான ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டார். மேலும், இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவித்த ரணில், தலைநகர் கொழும்பு உள்ளடங்கிய மேற்குப் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார்.









