குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் கார்டன் எனும் தோட்டத்தை புதுப்பித்து அம்ரித் உதயான் எனும் பெயரில் பொதுமக்களின் பார்வைக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைத்தார்.
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முகல் கார்டன் எனும் பெயரில் தோட்டம் அமைந்துள்ளது. முகலாயர்களின் கலைகளை பிரதிபலிக்கும் வகையில் இந்த தோட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தோட்டம் இயற்கை சூழ அமைக்கப்பட்டுள்ளது. செவ்வக வடிவ தோட்டம், வட்ட வடிவ தோட்டம், மூலிகை தோட்டம், ஆன்மீக தோட்டம், இசை தோட்டம் என பல தோட்டங்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் இடம்பெற்றுள்ளன.
முகல் தோட்டம் பாரசீக கலை வடிவில் முகலாய அரசர் பாபரால் உருவாக்கப்பட்டது. இத்தோட்டத்தை போன்றே காஷ்மீர், டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் பல தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்பட்டு வந்தது.
முகல் கார்டன் எனும் இத்தோட்டத்தின் பெயரை மாற்றி அம்ரித் உதயான் என்று பெயர் மாற்றம் செய்துள்ளதாக குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்திருந்தது. 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தை “சுதந்திர இந்தியாவின் அமிர்த பவள விழா” என இந்திய அரசு அனுசரித்து வரும் நிலையில் அதன் ஒரு பகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்துள்ளதாக குடியரசு மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முகல் கார்டன் எனும் இந்த தோட்டத்தை ”அம்ரித் உதயான்” தோட்டம் என்ற பெயரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். புதுப்பிக்கப்பட்ட அம்ரித் உதயான் தோட்டம் பொது மக்களின் பார்வைக்காக ஜனவரி 31 முதல் மார்ச் 26 வரை திறக்கப்படும் எனவும் அதன் பிறகு பிரத்யேகமாக விவசாயிகளுக்காக மார்ச் 28ம் தேதியும், மாற்றுத் திறனாளிகளுக்காக மார்ச் 29ம் தேதியும், இராணுவம், துணை இராணுவம் மற்றும் காவல் துறையினர் பார்வையிடுவதற்காக மார்ச் 30ம் தேதியும் திறக்கப்படும் என குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– யாழன்







