ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கை இந்தியா மற்றும் அதன் நிறுவனங்கள் மீதான தாக்குதல் என, அதானி குழுமம் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதனால், அந்த குழுமத்தின் மதிப்பு இரண்டே நாட்களில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிந்தது. இந்நிலையில், தங்கள் மீதான விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அதானி குழுமம், 413 பக்க அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ஹிண்டன்பர்க் ஜனவரி 24ம் தேதி வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இவை பொய்யான தகவல்கள் மற்றும் அடிப்படை ஆதாரமற்ற, உள்நோக்கத்துடன் கூடிய பொய்யான குற்றச்சாட்டுகளின் தொகுப்பு. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீடுகளில் அதானி குழுமம் வளர்ச்சி அடைந்திருக்கும் வேளையில், இக்குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது ஹிண்டன்பர்கின்
நம்பகத்தன்மை மற்றும் நெறிகள் குறித்து கேள்வியெழுப்புகிறது.
இந்த குற்றச்சாட்டை வெளியிட்டதற்கான காரணங்களை ஹிண்டன்பர்க் வெளியிடவில்லை. சுயநலத்தை நோக்கமாக கொண்டு வெளியிடப்பட்டுள்ள அந்த ஆய்வறிக்கை, பத்திரங்கள் மற்றும் அந்திய செலாவணி சட்டங்களின் விதிமீறலாகும்.
பங்குதாரர்களின் நலனை பாதுகாக்க தாங்கள் கடமைப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதேபோல், தங்களின் பங்குச்சந்தை நிறுவனங்கள் வலுவான தணிக்கை கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளதாகவும், நாட்டின் வளர்சிக்கு உறுதுணையாக இருப்பதை நோக்கமாக கொண்டே தாங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதானி குழுமம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஹிண்டன்பர்க் நிறுவனத்தால் எழுப்பப்பட்ட 88 கேள்விகளில், 65 கேள்விகளுக்கு உரிய அமைப்புகளிடம் ஏற்கனவே விளக்கம் அளித்து அதானி குழுமம் அறிக்கை அளித்துள்ளது. மீதமுள்ள 23 கேள்விகளில் 18 கேள்விகள் பங்குதாரர்கள் மற்றும் அதானி குழுமத்தை சாதார நிறுவனங்கள் பற்றியவை. மீதமுள்ள 5 கேள்விகள் அடிப்படையற்ற தரவுகளை கொண்ட குற்றச்சாட்டுகள் என அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.







