ஜெர்மனியில் இருந்து நாளை பெங்களூரு திரும்புகிறார் பிரஜ்வல் ரேவண்ணா!

பிரஜ்வல் ரேவண்ணா நாளை ஜெர்மனியில் இருந்து இந்தியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.   கர்நாடகாவின் ஹாசன் தொகுதி…

பிரஜ்வல் ரேவண்ணா நாளை ஜெர்மனியில் இருந்து இந்தியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.  

கர்நாடகாவின் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா.  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த இவர் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் மற்றும் ரேவண்ணாவின் மகனுமாவார்.  கடந்த மாதம் 26-ம் தேதி மக்களவைக்கு 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற ஹாசன் தொகுதியிலிருந்து பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டார்.

தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளன.  இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். பெண்களை மிரட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.

அரசின் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ராஜாங்க பாஸ்போர்ட்டை பயன்படுத்தி அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டதாக கூறப்பட்டது.  அவரின் பாஸ்போா்ட்டை ரத்துசெய்ய கா்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தது.

இதனிடையே,  பிரஜ்வல் ரேவண்ணா மே 31ம் தேதி காலை 10 மணியளவில் சிறப்பு புலனாய்வுக் குழு முன் ஆஜராவதாக வீடியோ வெளியிட்டார்.  அதில், “விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுப்பேன் எனவும் எனக்கு எதிரான பொய்யான வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  சட்டத்தை நான் நம்புகிறேன். சட்டத்தின் முன் நான் நிரபராதி என நிரூபிப்பேன்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில்,  பிரஜ்வல் ரேவண்ணா நாளை ஜெர்மனியில் இருந்து இந்தியா புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவர் ஜெர்மனியின் முனிச்சிலிருந்து, பெங்களூருக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதாகவும்,  தொடர்ந்து அவர் வெள்ளிக்கிழமை அதிகாலை பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.