ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்கும் சட்டங்களை இயற்ற மாநில அரசுகளுக்கு அரசியல் சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று மக்களவையில் தெலங்கானா உறுப்பினர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம், இந்தியாவில ஆன்லைன் கேமிங்கால் ஏற்படும் தாக்கம் அதிகமாகியுள்ளது. இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளின் விவரங்களை மத்திய அரசும் அறிந்துள்ளது.
அரசியல் சாசனத்தின் 7-வது அட்டவணையின் பிரிவு 2-ன் படி ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சில மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் சூதாட்டம் உள்ளிட்டவற்றை தடை செய்து சட்டம் இயற்றியுள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டங்களை நெறிப்படுத்தும் பணிகளில் மத்திய அரசும் ஈடுபட்டு வருவதாகவும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.







