”நடிப்பால் அழவைக்கிறேன் பாருங்கள்”- சவாலுடன் சிவாஜி கணேசன் நடித்த வியட்நாம் வீடு

“பல நடிகர்கள், பிராமண பாஷையைப் பேசி சிரிக்க வைத்தார்கள். நான் பேசி உங்களையெல்லாம் நடிப்பால் அழவைக்கிறேன் பாருங்கள்” என்ற சவாலுடன் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் தான் வியட்நாம் வீடு. அத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய…

“பல நடிகர்கள், பிராமண பாஷையைப் பேசி சிரிக்க வைத்தார்கள். நான் பேசி உங்களையெல்லாம் நடிப்பால் அழவைக்கிறேன் பாருங்கள்” என்ற சவாலுடன் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் தான் வியட்நாம் வீடு. அத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய தகவல்களை தற்போது பார்க்கலாம் வாருங்கள்…

வ.உ.சி.யாக, கட்டபொம்மனாக, கர்ணனாக மட்டுமின்றி, பாசமுள்ள அண்ணனாக, அவலட்சணம் கொண்ட கோடீஸ்வரனாக எண்ணற்ற திரைப்படங்களில் ஏற்றுக் கொண்ட பாத்திரமாகவே மாறிய சிவாஜி, பிரஸ்டீஜ் பத்மநாபனாக நடித்த படம் வியட்நாம் வீடு. 60 வயது முதியவராக, கம்பீரம் குறையாத நடை, உடை, முக பாவனையுடன் அச்சு அசல் பிராமணராக அரிதாரம் பூசி நடிகர் திலகம் சிவாஜி நடித்திருந்தார். எந்தச் சூழ்நிலையிலும் தனது கவுரவத்தை விட்டுக்கொடுக்காத, அதுவரை நடிக்காத வேடத்தில் சிவாஜி நடித்து.. இல்லை வாழ்ந்து காட்டிய மற்றொரு திரைப்படம் வியட்நாம் வீடு.

பக்கம் பக்கமாக எழுதித்தரப்பட்ட வசனங்களை பேசி நடித்தாலும் அவரால் பிராமணர் பாஷை பேசி நடிக்க முடியுமா என கேட்ட சிலரின் கேள்விக்கு பதில் தந்தார் சிவாஜி. கெளரவம், மரியாதை, கம்பீரத்தை தனது லட்சியமாகக் கொண்டு வாழும் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்தார் சிவாஜி. பிராமணத் தந்தையாக உடலாலும், ஒப்பனையாலும் புறங்கையை கட்டியபடி நடக்கும் கம்பீரம் என, குடும்பத்தலைவனாகவே புது அவதாரம் எடுத்திருப்பார் சிவாஜி.

சிவாஜிக்கு இணையாக எள்ளளவும் குறைவைக்காமல் நடிப்பில் கலக்கியிருப்பார் நடிகை பத்மினி. கணவருக்கு கப்பில் கையை விட்டபடி காபி தர. தம்பதி இடையே நகழும் செல்லச் சிணுங்கல் ஒன்றே போதும்.’பாலக்காட்டுப் பக்கத்திலே பாடலில் வெகுளித்தனம் என்றால் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால்’ பாடலில் உறவுகளால் ஏற்பட்ட ஏமாற்றம் தெரியும். ‘சாவித்ரீ… சாவித்ரீ…’ என கொஞ்சலும் கெஞ்சலுமாக, அன்பும் கேலியுமாக அழைத்து, ஆல விழுதாக ஆயிரம் உறவு வந்தாலும் உன்னைப்போல் யாரடி என மடிசாயும் காட்சியில் இருவரது நடிப்பில் கலங்காத கண்ணும் கலங்கும்.

வியட்நாம் வீடு திரைப்படம் வெளியாகி 52 ஆண்டுகளான பின்னும், இன்னமும், வியட்நாம் வீட்டில் குடிகொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். மீண்டும் சிவாஜி பிறந்தால்தான் இப்படி திரைப்படங்களும் நடிப்பும் சாத்தியமாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.