அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலால் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் தவெக அரசு மீது தமிழ் நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் சி.வி. சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் தவெக சார்பு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு அதிமுக எம்.பி. இன்பதுரை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாடாளுமன்றத்தில் 1993 ல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற குதிரை பேரம் மூலம் JMM எம்பிக்கள் ஆதரவை குறுக்கு வழியில் பெற்ற அன்றைய பிரதமர் நரசிம்மராவ்,பூட்டாசிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது போன்று, தற்போதும் முதலமைச்சர் விஜய் மீது வழக்கு வர வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.







