திருநெல்வேலியில், ரூ.15 கோடி மதிப்பில் பொருநை என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புக்கு எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஆய்வுப் பணியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த திருநெல்வேலியில் பொருநை என்ற பெயரில் 15 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும், இந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானவை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கீழடி நாகரிகம் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையானது என கூறப்பட்ட நிலையில், பொருநை நாகரிகம் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, அருங்காட்சியகம் குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

சிவகளை நாகரிகம் 3 ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையானது என்று அறிவித்துள்ளது தாமிரபரணி ஆற்று நாகரிகத்தில் ஒரு மைல் கல் என வரலாற்றாசிரியர் சிவகளை மாணிக்கம் தெரிவித்துள்ளார். அங்கு கிடைத்த மேலும் பல பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்தினால் பல வரலாறுகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.







