தவறான புகைப்படங்களை அனுப்பி தனது பெயருக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சிப்பதாக நியூஸ் 7 தமிழுக்கு பாடகி சுசித்ரா விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி சுசித்ரா தன்னுடைய ரசிகர்களுக்கு அனுப்பியதாக, கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சில புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக தொலைபேசியில் பேட்டியளித்த சுசித்ரா, புகைப்படங்களில் சில பாடல் வரிகளும் அதற்கு தவறான அர்த்தமுள்ள எம்மோஜிகளும் தாம் அனுப்பியதாக பகிரப்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற டுவிட்டர் கணக்கு மூலமாக தன்னுடைய பெயருக்கு களங்கம் விலைவிக்க நினைத்த சிலர் மீண்டும் தன்னுடைய பெயரை தவறாக சித்தரிக்க இந்த மாதிரியான புகைப்படங்களை பகிர வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சுசி லீக்ஸ் வெளியானபோது அது தொடர்பாக அப்போது சைபர் கிரைமில் புகார் அளித்தும் அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் தற்போது உருவாகியுள்ள இந்த பிரசனைக்கு புகார் அளிக்க விருப்பமில்லை என தெரிவித்துள்ளார்.
தான் யாருக்கும் எந்த செய்தியும் அனுப்பவில்லை, தன் பெயரில் ஏதாவது புகைப்படம் வந்தால் ரசிகர்கள் அதை பொருட்படுத்த வேண்டாம் எனவும் பாடகி சுசித்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.








