காதல் கணவர் தாக்கியதை அடுத்து நடிகை பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். புகாரை அடுத்து அவர் கணவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே. சர்ச்சை நடிகையான இவர், கடந்த 2011 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இதன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் அரைநிர்வாணப் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை இப்போது கிறங்கடித்து வருகிறார்.
இவர், தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். திருமணமான சில நாட்களிலேயே தன்னை கணவர் தாக்கியதாக கோவா போலீசில் புகார் செய்தார் பூனம். போலீசார் சாம் பாம்பேவை கைது செய்தனர். பின்னர் இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் இருவருக்கும் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. சாம் பாம்பே, பூனம் பாண்டேவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் தலை, முகம் மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரை அடுத்து, மும்பை போலீசார் சாம் பாம்பே-வை கைது செய்துள்ளனர்.









