பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியிட்ட நிலையில் அதன் வரலாற்று பின்னனி குறித்து இதில் பார்க்கலாம்.
அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புதினமான பொன்னியின் செல்வன் கல்கி வார இதழில் தொடர்கதையாக 1950- 1955 காலகட்டங்களில் வெளியிடப்பட்டது. வாசகர்களிடம் கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் இதே புதினம் கல்கி இதழில் தொடர் கதையாக வெளியிடப்பட்டது. சோழப் பேரரசையும் அதன் வரலாற்று சிறப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்று புதினம் உருவாக்கப்பட்டது. பல பதிப்பகங்கள் பொன்னியின் செல்வன் கதையை புத்தகங்களாக வெளியிட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் கதையை மையமாகக்கொண்டு இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். முதல் பாகத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் மணிரத்னம் கல்லூரி படிக்கும் போது பொன்னியின் செல்வன் கதையை படித்ததாகவும் 40 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடையை மனதை விட்டு இந்த கதை போகவில்லை எனவும் தெரிவித்தார். இந்த படத்தை எங்களுக்காகவே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் விட்டு சென்றதாகவும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
எம்ஜிஆருக்கும் பொன்னியின் செல்வனுக்கும் ஒரு மிகப்பெரிய தொடர்பு உள்ளது. நாடோடி மன்னன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு எம்ஜிஆர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதாக அறிவித்தார். 1958 இல் ரூ 10,000 கொடுத்து பொன்னியின் செல்வன் கதையை வாங்கினார் எம்ஜிஆர். பொன்னியின் செல்வன் என்ற பெயரிலேயே இப்படத்தை இயக்குவதாகவும் அறிவித்து முதன்மை நடிகர்களாக வைஜெயந்திமாலா, ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி, சரோஜா தேவி, எம்.என்.ராஜம், பாலைய்யா, நம்பியார் உள்ளட பலரை அறிவித்தார்.
படப்பிடிப்பு துவங்கும் முன்பு, எம்ஜிஆருக்கு விபத்து நேர்ந்து காயம் ஏற்பட்டது. அந்த காயம் ஆற ஆறு மாதங்கள் ஆனது. இதனால் அப்போது அப்படத்தை தொடர முடியவில்லை பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் உரிமையை மறுபுதுப்பிப்பு செய்தார் எம்ஜிஆர். ஆனால் இறுதிவரை அவரால் அப்படத்தை எடுக்க முடியாமல் போனது. இன்று வரை எம்ஜிஆர் எடுக்க நினைத்து முடியாமல் போன திரைப்படங்களில் பொன்னியின் செல்வம் முக்கியமானதாக உள்ளது.
பின்னர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் கதையின் உரிமையை பெற்றிருந்தார். 1994 இல் அவருடன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுப்பதாக மணிரத்னம் முடிவு செய்தார். அந்த கால கட்டத்தில் முன்னனி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் படத்தை எடுக்க அதிக தொகை தேவைப்பட்டதாலும், மேலும் சில காரணங்களாலும் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முடியாமல் போனது.
பின்னர் மீண்டும் 2011 இல் இயக்குனர் மணிரத்னம் நடிகர் விஜய், மகேஷ் பாபு, ஆர்யா உள்ளிட்ட பலரை வைத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மீண்டும் எடுக்க முயற்சி செய்தார். படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் முன்பு படப்பிடிப்பு நடத்த தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கான அனுமதி கிடைக்கவில்லை. செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தும் அளவிற்கு பட்ஜெட் இல்லாத காரணத்தால் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து 3 முறை மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்து முடியாமல் போனது.
இறுதியாக தற்போது லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக எடுத்து முடித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பகுதிகளாகத் திரைக்கு வரத் தயாராக உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஷ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
– தினேஷ் உதய்