தமிழ் சினிமாவில் நடிகைகள் புரொமோஷன் பணிகளில் கலந்து கொள்வதில்லை என்ற எண்ணத்தையும் பொன்னியின் செல்வன் படக்குழு மாற்றியது.
மணி ரத்னத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன், படக்குழுவுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவுக்கே பெருமையாக மாறியுள்ளது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.
இந்த அளவிற்கு வசூல் சாதனை படைக்கப் பொன்னியின் செல்வன் கதை எப்படி மக்களைக் கவர்ந்ததோ அது போல அந்த படத்தின் புரொமோஷன் பணிகளும் ரசிகர்களைக் கவர்ந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் கட்டாயம் 4 நாட்களாவது படத்தின் புரொமோஷன் பணிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்னும் ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நடிகர்கள் தேர்வு செய்யும் போதே புரொமோஷன் பணிகளுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டும் என இயக்குனர் மணி ரத்னம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு அதன் பின்னரே நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போலத் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் வரை கதாபாத்திரங்கள் குறித்தோ அல்லது மற்ற விஷயங்கள் குறித்தோ பேச கூடாது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஷ்வர்யா ராய், பார்த்திபன் உள்ளிட்ட பெரும்பாலான நடிகர்கள் இந்தியா முழுவதும் சென்று படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு இடங்களிலும் ஏதாவது ஒரு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தனர். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் நடிகைகள் புரொமோஷன் பணிகளில் கலந்து கொள்வதில்லை என்ற எண்ணத்தையும் பொன்னியின் செல்வன் படக்குழு மாற்றியது.
இப்படி தொடக்கம் முதல் இறுதிவரை மணி ரத்னத்தின் வித்தியாசமான சிந்தனைகள் பொன்னியின் செல்வன் படத்தை மட்டுமல்ல தமிழ் சினிமாவின் போக்கையும் மாற்றியுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.







