பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக விவாதிக்கத் தயாரா என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி சவால் விடுத்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும், தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் கடந்த பொங்கலுக்கு 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய 45 கிராம் பொருள்களுக்கு வழங்கிய தொகை ரூ. 45. ஆனால் இந்த பொங்கலுக்கு எங்கள் ஆட்சியில் 50 கிராம் முந்திரி பருப்பு, 50 கிராம் திராட்சை, 10 கிராம் ஏலக்காய்ஆகிய 110 கிராம் பொருள்களுக்கு வழங்கிய தொகை ரூ. 62 என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
திமுக ஆட்சியில் ஒப்பந்தப்புள்ளி கோருவது எளிமையாக்கப் பட்டுப் பலரும் கலந்து கொண்டு அவர்கள் கொடுத்த விலைப்புள்ளியில் குறைந்தவற்றிற்கு கொள்முதல் ஆணை வழங்கப்படும் வெளிப்படையான நடைமுறை கொண்டு வரப்பட்டதால், இதில் மட்டும் ஒரு மாதத்திற்கே ஒரு கொள்முதலில் ரூ.74.75 கோடி எங்கள் அரசால் மீதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேற்குறிப்பிட்ட இரண்டு கொள்முதல்களில் மட்டும் இரண்டு மாதத்திற்கே ஒரு துறையில் மட்டுமே இவ்வளவு பணத்தை நாங்கள் மீதப்படுத்தி இருக்கிறோம் என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராயிருந்த 51 மாத காலத்தில் எல்லாத் துறைகளிலும் சேர்த்து எவ்வளவு கொள்ளையடித்திருப்பார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்து விட்டு அபாண்டமான ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறியுள்ள எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுத் தொகுப்பு கொள்முதல் பற்றி என்னுடன் விவாதிக்கத் தயாராயுள்ளாரா? என்ற சவால் விடுத்ததோடு, இல்லாவிடில் இவர் தனது தவறான குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.








