அரசு வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பொங்கல் பரிசு தொகையாக ரேசன் அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் என தமிழக அரசு அறிவித்திருந்தது. டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக சின்னம் இடம் பெற்றிருப்பதாக புகார் எழுப்பிய திமுக, இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, தமிழகத்தில் இரு இடங்களில் மட்டுமே அதிமுக தலைவர்களின் படங்கள் இடம்பெற்ற டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறினார். அதிகாரப்பூர்வ டோக்கன்களுக்கு மட்டுமே பரிசுப்பொருள் மற்றும் பரிசுத்தொகை வழங்க வேண்டுமென ரேசன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதனை பதிவு செய்த நீதிபதிகள், அரசின் சுற்றிறிக்கையை நாளை மாலை 5 மணிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அறிவுறுத்தினர். அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்றத்தை திமுக நாடலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்