பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழு நேரில் சென்று ஆய்வு செய்தது. அப்போது நோயாளிகள் பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி புகாரளித்தனர்.
பொள்ளாச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சுமார் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்வதற்காக குழுத் தலைவர் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை தலைமையில் உறுப்பினர்கள் வந்திருந்தனர். அவர்கள் அங்கிருந்த மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் நோயாளிகளின் வருகை குறித்தும் ஆய்வு செய்தனர். ஆய்வை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பிய போது அங்கு சிகிச்சைக்காக காத்திருந்த புறநோயாளிகள் குழுவினரிடம் மருத்துவமனையில் நிலவும் பல்வேறு அவலங்கள் குறித்து பரபரப்பு குற்றசாட்டுகளை முன்வைத்தனர். மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் மருத்துவர்கள் வருவதில்லை எனவும், உரிய பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை எனவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் குழு உறுதியளித்தது.
வேந்தன்







