தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஏல அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், முதலமைச்சரின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில், கடந்த 2017ம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு, மத்திய அரசு ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைக்காடு அருகே கருவட தெரு உட்பட இந்தியா முழுவதும் 75 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் ஏல அறிவிப்பை நிறுத்த வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும், ஹைட்ரோ கார்பன் ஆய்வு உற்பத்தி செய்ய தேவைப்படும் அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது என தெரிவித்தார். காவிரி படுகை வளத்தை கண்ணிமையை காப்பது போன்று, தமிழ்நாடு அரசு காக்கும் என்றும், ஹைட்ரோ கார்பன் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது அரசின் கொள்கை என்றும் தெரிவித்திருந்தார்.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்தன. மக்கள் பக்கம் தான் நிற்போம் என காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசர் கூறிய நிலையில், பிரதமருக்கு கடிதம் எழுதியதை வரவேற்பதாக விசிக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதே கருத்தை வலியுறுத்தி பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ள அவர், காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதேபோன்று, தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் நெடுவாசல் வருவதால், ஹைட்ரோ கார்பன் ஏல அறிவிப்பினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மத்திய அரசை வலியுறுத்தி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியின் போதே டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஏல அறிவிப்ப விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில அரசுகளின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.







