கட்டுரைகள்

நகர் மன்ற மாணவரணி து.அமைப்பாளர் முதல் எம்.பி வரை..


நிருபன் சக்கரவர்த்தி

கட்டுரையாளர்

ஒரு அரசியல் கட்சி வளர்வது பெரிதல்ல. ஆனால், அதன் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதில்தான் அதன் அடுத்தகட்ட வெற்றிக்கான அடித்தளம் அமைந்துள்ளது.

திமுக ஆரம்ப காலத்தில் திண்ணை பிரச்சாரம், தெருமுனை விளக்க பொதுக்கூட்டம், பயிற்சி பட்டறை, படிப்பகங்கள், பாசறைகளாக இயங்கி வந்த சூழலில் ‘மாறும் என்ற வார்த்தை மட்டும்தான் மாறாது’ என்ற தத்துவத்தின்படி, இணைய வளர்ச்சியால் கட்சிகளும் இணையத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தன.

ஆம். காலத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு ஓடிக்கொண்டிருக்கும் சமூகத்தை, கூட்டம் கூட்டி கொள்கையை பரப்புவது சாத்தியமில்லை என்பதை நன்கறிந்து, சில ஆண்டுகளுக்கு முன்பு, தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கியது திமுக. இதையொட்டி, சமூக வலைத்தளங்களை அனைத்து கட்சிகளும் தங்களது கொள்கையை பரப்பும் பாசறையாகவே பயன்படுத்தி வருகின்றன.

1962 சட்டப்பேரவைத் தேர்தலில் அறிஞர் அண்ணா தோற்கிறார், ஆனால் அவரது கட்சியினர் 50 பேர் வெற்றி பெறுகின்றனர். அழுதுகொண்டே கோட்டைக்குள் நுழையும் தம்பிகளுக்கு அண்ணா எழுதும் கடிதம் என்று ஆரம்பமாகும் அந்த கடிதத்தில், “படைகள் தோற்றால் மீண்டும் படைகளை உருவாக்கி அனுப்பலாம். மீண்டும் தோற்றால் மறுபடியும் படையை உருவாக்கி அனுப்பலாம். ஆனால் பாசறை அழிந்தால் படைகளை உருவாக்க முடியாது” என்ற வரிகளை போல, இணையத்தில் பாசறை போல் திமுக கொள்கைகள், வரலாற்று நிகழ்வுகளை புள்ளிவிவரமாக, சான்றோடு பதிலளித்து கொண்டிருப்பவர்தான் தற்போது மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ள எம்.எம்.அப்துல்லா.

புதுக்கோட்டையை சேர்ந்த இவர், மாணவர் பருவத்திலிருந்து திமுக உறுப்பினர். எம்.பி.ஏ பட்டதாரியான இவருக்கு அரசியல் ஆசான் என்றால் அது புதுக்கோட்டை திமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளர் கீரையார் என்ற தமிழ்செல்வன்தான். 1993-ல் புதுக்கோட்டை நகர்மன்ற திமுக மாணவரணி துணை அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர்,1996-ல் நகர அமைப்பாளர், 1998-ல் கிளைச் செயலாளர் என முன்னேற்றம் கண்ட எம்.எம்.அப்துல்லாவின் அரசியல் பயணம் சென்னையை நோக்கி நகர்ந்தது. தலைநகரில் மாணவ, மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளை நடத்தியும், நூல்கள் குறித்து விமர்சனம், அணிந்துரை என ஒரு இலக்கிய ஆளுமையாகவும் வலம் வரத் தொடங்கினார். மேலும் திராவிட சிறகுகள் உள்ளிட்ட பாசறைகளை வழிநடத்தியும் வந்தார். 2006-ல் வலைப்பூவிலும் (blog) எழுத தொடங்கிய அவர் பல்வேறு தேர்தல்களில் திமுக பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

திமுக தலைவர் மு.கருணாநிதி முன்னிலையில், “சிறுபான்மையினருக்கு என்ன செய்தது திமுக?” என்ற புத்தகத்தையும் வெயிட்டுள்ளார். கருணாநிதி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். இவரின் திருமணத்திற்கு துர்கா ஸ்டாலினும், உதயநிதியும் அவரது நண்பரும் தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேசும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

2014-ல் திமுக மாநில சிறுபான்மையினர் அணி துணை செயலாளராகவும், 2018-ல் மாநில தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராகவும், செயலாற்றினார் எம்.எம்.அப்துல்லா.

2014-ல் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தார். 2020-ம் ஆண்டு 3 திமுக மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்வில் அப்துல்லாவின் பெயர் இடம்பெறலாம் என பேசப்பட்டது. ஆனால் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோவிற்கு வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) அணி என்ற புதிய அணியை உருவாக்கியது திமுக, அதில் இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், கட்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்காக உரிய அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவருக்கு அந்த வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது.

ஒரு பேஸ்புக் பதிவில் கூட அவர் எம்.பி, எம்.எல்.ஏ பதவியை நான் விரும்பியதில்லை அடுத்த தலைமுறைக்கு கொள்கையை எடுத்து செல்லும் பணியில் ஈடுபடவே எனது விருப்பம் என பதிலளித்திருந்தார். அப்துல்லாவின் நீண்ட பயணத்தில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் எம்.பி பதவி கூட சற்று தாமதமானதே என்று இணையவாசிகள் கூறிவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து மாநிலங்களவை தேர்வாகும் முதல் நபர் என்பதும் குறிப்பிடதக்கது.

அரசு பதவியில் இறையன்பு, சைலேந்திரபாபு உள்ளிட்டோரும், ஆலோசனை குழு மற்றும் வாரியத்தில் ஜெயரஞ்சன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட அறிவார்ந்த ஆளுமைகளை கொண்ட ஒரு நீண்ட நெடிய பட்டிலை உருவாக்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியலில் புதுமை படைத்துள்ளார். அந்தவழியில், தற்போது எம்.எம்.அப்துல்லாவின் தேர்வு, மேலும் ஒரு மகுடமாக பார்க்கப்படுகிறது.

தரவுகளோடு பேசக்கூடிய அப்துல்லா போன்றவரை டெல்லிக்கு அனுப்புவது என்பது 30 வயதில் வலம்புரிஜானை மாநிலங்களை உறுப்பினராகவும், 35வயதில் ஆ.ராசாவை மத்திய அமைச்சராகவும் முரசொலி மாறன், வைகோ, திருச்சி சிவா உள்ளிட்டோரை டெல்லியின் முகமாக மாற்றிய தந்தையின் பாணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்து அகில இந்திய அரசியலை முன்னெடுத்து திமுகவை நகர்த்துகிறார் என்பதே அரசியல் கணிப்பாளர்களின் கருத்தாக பார்க்கப்படுகிறது.

எழுத்து: மா.நிருபன் சக்கரவர்த்தி

Advertisement:
SHARE

Related posts

வாழ்வாதாரம் தொலைத்த பூக்கடை அக்காக்கள்…!

Gayathri Venkatesan

சிம்புவை ஆட்டிப்படைக்கும் 9-ம் எண் விவகாரம்

Saravana Kumar

ஊரடங்கில் அதிகம் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் முதியோர்