எம்ஜிஆருக்கு முதல் வில்லன்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தையே புரட்டிப் போட்ட கலைஞன் டி.எஸ்.பாலையா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் என அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு மாபெரும் நடிகன். சினிமா என்றாலே, கொடுக்கும்…

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தையே புரட்டிப் போட்ட கலைஞன் டி.எஸ்.பாலையா. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் என அனைவராலும் பாராட்டப்பட்ட ஒரு மாபெரும் நடிகன்.

சினிமா என்றாலே, கொடுக்கும் கதாபாத்திரங்களை அப்படியே நடித்துக் காட்டுவது என்று நம்மில் பலர் நினைத்துள்ளோம். ஆனால் அதுவல்ல உண்மை. அதைத் தாண்டி ஒரு கதாபாத்திரம் மக்களின் மனதில் நிற்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதற்கு அபரிவிதமான காதல் இருக்கவேண்டும் அந்த கலைகளின் சங்கமத்தின் மேல். ஒரு கதாபாத்திரமாக நடிப்பதைத் தாண்டி கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டுபவர் என்றால் அது பாலையா என்றே கூறலாம்.

பல கதாபாத்திரங்களில் பல படங்களில் பல்வேறு திறமைகளை ஒருசேரக் காட்டிய கலைஞர் பாலையா. தூத்துக்குடி மாவட்டம் சுண்டங்கோட்டையில் பிறந்தவர். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவருக்குக் கல்வியின் மேல் அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. சிறு வயதிலேயே பள்ளிப்படிப்பைத் தொடராமல் நாடக நிறுவனங்களுக்கு நடிக்க சென்றுவிட்டார் டிஎஸ் பாலையா. ஆனால் வாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை.

ஒருமுறை ஒரு நாடக நிறுவனத்தில் ஷேக்ஸ்பியரின் Cymbeline எனும் நாடகம் ஒன்று நடந்துகொண்டிருந்தது. அந்த நேரத்தில் பெசானியோ கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகர் ஒருவர் இவரிடம் உன்னால் முடிந்தால் மூன்று கைத்தட்டல்களை பெற்றுவிடு பார்ப்போம் என சவால் விடுக்க, சவாலை ஏற்ற பாலையா தனது நடிப்பின் நயத்தால் அரங்கத்தையே அதிரவைத்தார். அவர் மேடை ஏறிய ஒவ்வொரு முறையும் மக்கள் அவரை கொண்டாடி ரசித்தனர்.

சிறு வயதில் வீட்டை விட்டு திருநெல்வேலிக்குச் சென்ற இவர், தனது 15-வது வயதில் முதன்முறையாக ஒரு நாடக நிறுவனத்தில் சேர்கிறார். அப்போது அச்சிறுவனுக்கு சம்பளம் கிடையாது. வாழ்க்கையின் முதல் கட்டத்தை சம்பளமில்லா வேலைக்காரனாக தான் தொடங்கினான் அந்த சிறுவன். முதல் 6 மாதங்கள் கழித்து தனது முதல் மாத சம்பளமாக 6 ரூபாய் கிடைத்தது.

கலையின் மேல் இவர் கொண்டிருந்த ஆர்வத்திற்கு திரைத்துறையில் ஒரு அடித்தளம் போட்டுக்கொடுத்தார் புகழ்பெற்ற அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன். நாம் அனைவருமே எம்.ஜி.ஆர் நடித்த முதல் திரைப்படம் எது என்று கேட்டால் 1936-ல் வெளியான சதி லீலாவதி என்று சட்டென்று கூறிவிடுவோம். அதே படத்தில் தான் பாலையா வும் வில்லனாக அறிமுகமாகியிருந்தார்.

டி.எஸ்.பாலையா தனது வாழ்நாளில் 88 திரைப்படங்கள் நடித்துள்ளார். இவற்றில் தில்லானா மோகனாம்பாள், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, காலம் மாறிப்போச்சு மற்றும் அம்பிகாபதி போன்ற திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை.

1914-ல் பிறந்த இவர் 1972ல் காலமானார். “டி.எஸ் பாலையா ஒரு அசைக்கமுடியா மாபெரும் கலைஞன் ” என்று கூறியுள்ளார், சதி லீலாவதி திரைப்படத்தை இயக்கிய அமெரிக்க இயக்குநர் எல்லிஸ் ஆர். டங்கன். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத படங்களை தந்த கலைஞர்களில் டி.எஸ்.பாலையாவுக்கு என்றும் தனியிடம் உண்டு.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.