முக்கியச் செய்திகள்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயானிடம் போலீஸார் தொடர் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் சயானிடம் போலீஸார் இன்றும் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீஸார் இதுவரை 210-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர் விவேக் ஜெயராமன், அதிமுக பிரமுகர்கள் சஜீவன், சஜீவனின் சகோதரர் சிபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, அவரது மகன், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளுக்கும் மேலாக உதவியாளராகப் பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் போலீஸார் 3 நாட்கள் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய தகவல்கள் எதுவும் கிடைக்காத நிலையில் போலீஸார் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஏற்கனவே விசாரணை நடத்தியவர்களையும் மீண்டும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணையானது கடந்த மூன்று வாரங்களாக தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் பல்வேறு நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்று இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீஸார் 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்து வெளியில் வந்த சயான் வேகமாக ஓடிச்சென்று இருசக்கர வாகனத்தில் (மற்றொருவருடன்) கிளம்பிச் சென்றார்.

இந்நிலையில், இன்றும் சயானிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் போராட்டம்: அதிமுக

Halley Karthik

யானை அட்டகாசத்தால் 8 மாத குழந்தை காயம்

Saravana Kumar

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: நளினி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

Janani