நடிகை பாலியல் வழக்குத் தொடர்பாக, ஆலுவாவில் உள்ள நடிகர் திலீப் குமாரின் வீட்டில் நடிகை காவ்யா மாதவனிடம் நேற்று போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
கேரளத்தைச் சேர்ந்த பிரபல நடிகையை 2017ஆம் ஆண்டு காரில் கடத்தி, பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் பாலச்சந்திரகுமார் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை அதிகாரிகளை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் திலீபின் 3 செல்போன்கள் உள்பட 6 செல்போன்களை ஆய்வு செய்தபோது இந்த வழக்கில் திலீபின் மனைவியும், நடிகையுமான காவ்யா மாதவனுக்குத் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவ்யா மாதவன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கொச்சி கிரைம் பிரான்ச் போலீஸார் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில், நடிகை பாலியல் வழக்கு மீதான விசாரணையை இம்மாதம் 30ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
அதன்படி,.நேற்று கிரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி. பைஜூ பவுலோஸ் தலைமையிலான போலீஸார் ஆலுவாவில் உள்ள நடிகர் திலீபின் பத்மசரோவரம் வீட்டுக்குச் சென்று காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் விசாராணை நடைபெற்றது. விசாரணையில் காவ்யா மாதவனின் சில பதில்களில் சந்தேகம் இருப்பதாகவும், தேவைப்படும்பட்சத்தில் மீண்டும் காவ்யா மாதவனிடம் விசாராணை நடத்தப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement: