பல்லடம் அருகே வங்கியில் கடன் பெற்று தருவதாக ரூ. 200 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வேலப்ப கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர்
சிவக்குமார். இவரது சகோதரர் விஜயகுமார், மகன் ராகுல் பாலாஜி மற்றும் பிரவீனா ஆகியோர் கோவை,திருப்பூர், ஈரோட்டில் 50க்கும் மேற்பட்டோரிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி சுமார் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த சத்தியமூர்த்தி,
ரத்தினசாமி, குமரேசன், பிரியா, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் நடவடிக்கையும் இல்லாததால் மாவட்ட ஆட்சியரிடமும், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்லடத்தை சேர்ந்த சிவக்குமார் உட்பட நான்கு பேர்
வழக்குப்பதிவு செய்து நால்வரையும் பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சௌமியா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு சிவக்குமார், பிரவீனா ஆகிய இருவரும் கைதான நிலையில், ஜாமீனில் வெளியே வந்தனர் . ஆனால் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த மூன்று மாதங்களாக நீதிமன்ற பிடியாணை உத்தரவுப்படி தனிப்படை போலீசார்
சிவக்குமார், பிரவீனா உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரவீனாவை திருச்சியில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்றிரவு சிவகுமார் தேனியில் இருப்பதாக கிடைத்த
தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் சிவகுமாரை தேனியில் கைது
செய்தனர். கைது செய்யப்பட்ட சிவகுமாரை பல்லடம் அழைத்து சென்று மருத்துவ
பரிசோதனைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







