பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜகவைச் சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.
பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த ஹெலிகாப்டர்கள் சகோதரர்களான எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவர்களது பண்ணை வீட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்று இரவு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கும்பகோணம் ஸ்ரீநகர் காலணி தீட்சிதர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் கும்பகோணத்தில் நிதி நிறுவனமும், கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தில் பால் பண்ணையும் நடத்தி வருகின்றனர். மேலும் இவர்கள் வெளி நாடுகளிலும் பல்வேறு தொழில்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. எம்.ஆர். கணேஷ் மற்றும் எம்.ஆர். சுவாமிநாதன் ஆகியோர் சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்து, ஹெலிகாப்டர் தளமும் வைத்திருப்பதால் அப்பகுதி மக்களால் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கபப்டுகிறார்கள். எம்.ஆர் கணேஷ் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக வர்த்தப் பிரிவு அணியின் தலைவராக பதிவி வகித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் நிதி நிறுவனத்தின் மூலம் பணம் செலுத்தினால், அது இரட்டிப்பாக திருப்பி வழங்கப்படும் எனக் கூறி விளம்பரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை நம்பி தொழிலதிபர்கள், வெளிநாட்டினர் உட்பட பலரும் கோடிக்கணக்கில் பணத்தை செலுத்தியுள்ளனர். இந்நிலை பணத்தை திருப்பி கேட்கும்போது, கொரோனாவை காரணம் காட்டி பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளனர். இதில் துபாயை சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஹெலிகாப்டர் சகோதரர்களை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த சகோதரர்களை தனிப்படை போலீசார் இன்று அவர்களது பண்ணை வீட்டில் வைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





