டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ளம் புகுந்த விவகாரம் : மேலும் 5 பேர் கைது

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த  விவகாரத்தில், மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்கள் நீர்த்தேங்கி காணப்படுகிறது.…

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்துக்குள் வெள்ள நீர் புகுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்த  விவகாரத்தில், மேலும் 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்கள் நீர்த்தேங்கி காணப்படுகிறது. டெல்லியின் மேற்குப் பகுதியில் ஓல்ட் இந்திரா நகரில்  ராவ் ஸ்டடி சர்க்கிள் என்ற ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு 7 மணியளவில் சுமார் 30 மாணவர்கள் மையத்தில் படித்துக் கொண்டிருந்தபோது தரைத்தளத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.

தகவலறிந்து அங்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் தத்தளித்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக வெள்ளத்தில் சிக்கி 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவர் என 3 பேர் உயிரிழந்தனர். இதனைக் கண்டித்து பயிற்சி மைய கட்டிடத்திற்கு முன் மாணவர்கள் ஒன்று கூடி டெல்லி மாநகராட்சியைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் : கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள பாதாளச் சாக்கடை அடைப்பை அப்புறப்படுத்தாலேயே கட்டடத்துக்குள் நீர் புகுந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து அப்பகுதியில் டெல்லி காவல்துறை மற்றும் அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சர்க்கிள்’ உரிமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரை நேற்று ( ஜூலை -29) கைது  செய்யப்பட்டிருந்தனர். இருவருக்கும் 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஹர்ஷவர்தன் கூறியதாவது:

“இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவர். வாகனத்தை தவறுதலாக இயக்கி பயிற்சி மைய கட்டடத்தின் கதவை சேதப்படுத்திய ஓட்டுநர் உள்பட மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.