சென்னையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் பெயரில் போலி பாஸ் வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணை ரேடியல் சாலை அருகே இளம்பெண்ணுடன் காரில் இருந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த நபர், தான் திமுக எம்.பி.யின் உறவினர் என கூறி, எம்.பி.,யின் பாஸ் ஒன்றையும் காட்டியுள்ளார். இதனால் போலீசார் அவரை அனுப்பி உள்ளனர். பின்னர் அந்த எம்.பி இடம் விசாரித்தபோது, அந்த இளைஞர் எம்பிக்கு உறவினர் கிடையாது என்பதும், அவர் போலி பாஸ் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வேளச்சேரியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஷியாம் என்பதும், ராஜகோபால் என்ற மருத்துவரின் உதவியால் போலியாக நாடாளுமன்ற உறுப்பினருக்கான பாஸ் தயாரித்ததும் தெரிய வந்தது. மேலும், ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் மோசடியில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, மருத்துவர் ஷியாம் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பள்ளிகரணை போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.







