கிருஷ்ணகிரி அருகே வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேனோடை நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கூழ் வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பி வியாபாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது வேங்கை நகர் என்ற பகுதியில் இவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர், அங்கேயே அடித்து ராஜேந்திரனை கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
போலீசார் நடத்திய விசாரணையின் முடிவில், ராஜேந்திரனின் மூன்றாவது மனைவி முனியம்மாளுக்கும் அவரது உறவினரான குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருந்துள்ளது. இதையறிந்த ராஜேந்திரன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த முனியம்மாள் தனது உறவுக்கு இடையூராக இருக்கும் கணவன் ராஜேந்திரனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதன்படி முனியம்மாளின் ஆண் நண்பர் குமார், அவரது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேந்திரனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ராஜேந்திரனின் மனைவி அவரது ஆண் நண்பர் மற்றும் கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.







