வாலிப கவிஞர் வாலி, ஐந்து தலைமுறை ஹீரோக்களுக்கு அசராமல் பாடல்கள் எழுதியவர். சுமார் 15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள வாலியின் அசத்தல் பாடல்கள் ஒன்றா, இரண்டா? எம்.ஜி.ஆர், சிவாஜிக்கு இவர் எழுதிய பாடல்கள் சகாவரம் பெற்றவை. எம்.ஜி.ஆருக்கும் வாலிக்குமான நெருக்கம் கூட அலாதியானதுதான். எம்.ஜி.ஆர்
நடித்த 63 படங்களுக்கு, பாடல் எழுதி இருக்கிறார், கவிஞர் வாலி.
இருந்தாலும் எம்.ஜி.ஆரிடம் வாலி சொன்ன பொய் காரணமாக, இருவருக்கும் சிறிது காலம் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது.
சிவகுமார் அறிமுகமான, ’காக்கும் கரங்கள்’ படத்திற்காக ’ஞாயிறு என்பது பெண்ணாக’
என்ற பாடலை எழுதிய கவிஞர் வாலி, ’எனக்கு அவசரமாக 5 ஆயிரம் ரூபாய்
வேண்டும்’ என்று கேட்டிருக்கிறார் ஏவி.எம் நிறுவனத்தில். அதற்கு அவர் சொன்ன
காரணம், ’பம்பாய்க்கு, போய் பொண்ணு பார்க்க போறேன்’என்பது. ஆனால், அவர் அங்கு
போகவில்லை. பணம் வாங்குவதற்காகவே, அப்படி பொய் சொன்னார்.
பாடல் ரெக்கார்டிங்கிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால், மறுநாள் செய்தித் தாள்களில் கவிஞர் வாலி, பம்பாய் பெண்ணை மணக்கிறார் என்று செய்தி வந்துவிட்டது. இதைக் கண்ட எம்.ஜி.ஆர். சில நாள் கழித்து கவிஞர் வாலியை அழைத்தார். ‘திருமண செய்தியை பார்த்தேன். என் தலைமையிலதான் கல்யாணம் நடக்கணும். நான்தான் நடத்தி வைப் பேன்’என்றார்.
வாலிக்கு தர்மசங்கடமாகி விட்டது. பொய் சொன்னதாக அவரிடம் சொல்லாமல், ’பம்பாய் பெண் எனக்குப் பிடிக்கலை, இப்போ கல்யாணம் இருக்காது’ என்றிருக்கிறார் வாலி. ’பரவாயில்லை, எப்போ உன் கல்யாணம் நடந்தாலும் என் தலைமையிலதான் நடக்க ணும்’என்றார் எம்.ஜி.ஆர். சரி என்றார் வாலி.
எம்.ஜி.ஆர் அப்படிச் சொன்ன அடுத்த வாரத்திலேயே கவிஞர் வாலி, தனது காதலியை திருப் பதியில் வைத்து திருமணம் செய்துகொண்டார், யாரிடமும் சொல்லாமல். அந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியாகிவிட, இதனால் எம்.ஜி.ஆருக்கு கோபம்.
இதனால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, வாலியுடன் பேசவில்லை எம்.ஜி.ஆர். பிறகு சில மாதங்களுக்குப் பிறகு, வாலியை தனது ராமாவரம் தோட்டத்துக்கு டிபன் சாப்பிட அழைத்து வரச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
டிபன் சாப்பிட்டபடியே, தான் நடிக்கும் ‘தாழம்பூ’ படத்துக்காக பாடல் எழுத சொன்னார் எம்.ஜி.ஆர். சிச்சுவேசன் கேட்ட வாலியிடம், ’எனக்கு எழுதணும், என்ன சுச்சுவேசன்னு தெரியாதா?’ என்றார், எம்.ஜி.ஆர். ஓகே என்று வந்த வாலி எழுதிய அந்தப் பாடல், ’எங்கே போய் விடும் காலம், அது என்னையும் வாழவைக்கும்’!
-ஏக்ஜி










