உதான் திட்டத்தின் கீழ் 900 புதிய விமான வழித்தடங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகர் புத்த மதத்தினரின் புனிதத்தலம் ஆகும். இங்குதான் புத்தர் மகாபரிநிர்வாணம் (பிறவா நிலை) அடைந்தாக கூறப்படுகிறது. தற்போது இங்கு ரூ.250 கோடி மதிப்பில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இது உள்நாட்டு மற்றும் சர்வதேச பக்தர்கள் இந்த பகுதிக்கு வருவதற்கு வசதியாக அமைவதுடன், உலகெங்கும் உள்ள புத்தரின் புனித தலங்களை இணைக்கும் வகையிலும் இந்த விமான நிலையம் இருக்கும். இந்நிலையில், இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருவதாக கூறினார். குஷிநகர் விமான நிலையம் திறக்கப்பட்டதால் விவசாயிகள், தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயனடைவார்கள் என்றும், அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும் என்றும் தெரிவித்தார். உதான் திட்டத்தின் கீழ், இதுவரை 900 புதிய விமான வழித்தடங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.