புனேவில் பாஜக தொண்டர் கட்டிய கோயிலில் இருந்து பிரதமர் மோடி சிலை, திடீரென அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த பாஜக தொண்டர் மயூர் முண்டே (Mayur Mundhe). பிரதமர் மோடியின் செயல்களால் ஈர்க்கப்பட்ட அவர், ஆந்த் (Aundh)என்ற பகுதியில், சுமார் 1.6 லட்சம் செலவில் பிரதமர் மோடிக்கு ஒரு கோயிலைக் கட்டினார். அதில் பளிங்குக் கற்களில் செதுக்கப்பட்ட பிரதமர் மோடியின் சிலையும் நிறுவப்பட்டது.
பிரதமரை வாழ்த்தும் வகையில் சிறப்புப் பாடலும் இங்கு எழுதப்பட்டிருந்தது. ’அயோத்தியில் ராமர் கோயில் அமையக் காரணமாக இருந்த பிரதமருக்கு கோயில் கட்ட நினைத்தேன். அதனால்தான் பிரதமர் மோடிக்குக் கோயில் கட்டினேன் என்று தெரிவித்திருந்தார்.
இதை தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் அப்பகுதியினர் கடுமையாக விமர் சித்திருந்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்தக் கோயிலில் வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடி சிலை இரவோடு இரவாக நீக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் அந்த வழியே சென்ற போது கோயிலில் மோடி சிலை இல்லாததைக் கண்டனர். கோயிலும் ஆரஞ்சு நிற ஷீட்களைக் கொண்டு மூடப் பட்டுள்ளது. இது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.








