முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி இன்று போட்டுக்கொண்டார். இந்த தகவலை டிவிட்டரில் அவர் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

டிவீட்டில், “டெல்லி எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டேன்; தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். ஒன்றாக இணைந்து கொரோனா இல்லா இந்தியாவை உருவாக்குவோம்” என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் இன்று முதல் 45 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தினை பொறுத்த அளவில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணத்துடன் இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்படுகிறது. www.cowin.gov.in என்கிற இணையத்திலும் அல்லது ஆரோக்கிய சேது செயலி மூலமாகவும் இந்த முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.10 கோடியை கடந்துள்ள நிலையில், 1.7 கோடி பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1.64 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1.57 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த, பாரத் பயோடெக் நிறுவனமும், ஐசிஎம்ஆரும் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு என இரண்டு தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16 முதல் அறிமுகப்படுத்தப்பட்டன. 3 கோடி முன்களப்பணியார்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்ட நிலையில் வதந்திகள் காரணமாக இதுவரை 1.43 கோடி முன்களப்பணியார்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது கட்ட தடுப்பூசி போடும் திட்டம் மூலம் ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தியா கொரோனா பாதிப்பில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

“சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்ற முயற்சி” -தொல்.திருமாவளவன்

Halley karthi

கருப்பர் கூட்டம் சுரேந்திரனுக்கு ஜாமீன்!

Niruban Chakkaaravarthi

உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன்: கமல்ஹாசன்

Vandhana