தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்துவருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் ஜானகிபுரத்தில் பாஜக சார்பில் “வெற்றிக்கொடி ஏந்தி, வெல்வோம் தமிழகம்” என்ற பெயரில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை என்று தெரிவித்தார். 4 ஜி என்று கூறினால் அது நேரு குடும்பத்தின் நான்காம் தலைமுறை என்றும் அமித்ஷா விமர்சனம் செய்தார்.
ஒருபுறம் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசும், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஏழைகளின் நலன்பற்றியே எப்போதும் சிந்தித்துக்கொண்டிருப்பதாக கூறினார். அதேநேரத்தில் குடும்ப அரசியலை முன்னிறுத்தும் திமுக- காங்கிரஸ் ஊழல் கட்சிகளாகத் திகழ்வதுடன், பிரித்தாளும் அரசியலில் ஈடுபடுவதாகவும் அமித்ஷா சாடினார். காங்கிரஸ்- திமுக கூட்டணி மத்திய ஆட்சியில் இருந்தபோது 12 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழலில் ஈடுபட்டதாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தான் பாராட்டுவதாகத் அவர் கூறினார். குறிப்பாக கொரோனா காலத்தில் தமிழக அரசு பிற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார். தமிழகத்துக்கு அதிக அளவில் நல்லாட்சிக்கான விருதுகள் கிடைத்திருப்பதை சுட்டிக்காட்டியும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமித்ஷா பாராட்டுத் தெரிவித்தார். நீர்மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டதற்காகவும் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டுத் தெரிவித்தார்.







