கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாகிவிடக்கூடாது: மோடி

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது என்று பிரமதர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சோசியலிச தலைவரான ராம் மனோகர் லோகியாவின் சீடராக அரசியல்வாழ்வைத் தொடங்கிய ஹர்மோகன் சிங் யாதவ், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பகுதியில் செல்வாக்கு…

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது என்று பிரமதர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சோசியலிச தலைவரான ராம் மனோகர் லோகியாவின் சீடராக அரசியல்வாழ்வைத் தொடங்கிய ஹர்மோகன் சிங் யாதவ், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்தார்.

சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏவாகவும், எம்எல்சியாகவும், எம்பியாகவும் பதவி வகித்தவர் அவர்.

அவரது 10ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ஹர்மோகன் சிங் யாதவ், யாதவ சமூகத்திற்காகவும், நாட்டின் கலாச்சாரத்திற்காகவும் பாடுபட்டதை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

இந்திரா காந்தி படுகொலையை அடுத்து நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்ததோடு, ஏராளமான அப்பாவி சீக்கியர்கள் படுகொலை செய்யப்படாமல் காப்பாற்றியவர் ஹர்மோகன் சிங் யாதவ் என பிரதமர் குறிப்பிட்டார்.

இதை அங்கீகரிக்கும் வகையிலேயே அவருக்கு சூரிய சக்ரா விருது வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனநாயகம் இருப்பதால்தான் கட்சிகள் இருக்கின்றன; நாடு இருப்பதால்தான் ஜனநாயகம் இருக்கிறது என்பதை உணர்ந்த அரசியல் கட்சிகளாக காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இருப்பதாக பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு ஒருபோதும் நாட்டுக்கு எதிரானதாக மாறிவிடக்கூடாது என எச்சரித்தார்.

சமீப காலமாக சமூகத்தைவிட, நாட்டைவிட தங்களின் கட்சி அரசியல் முக்கியம் என அரசியல் கட்சிகள் எண்ணக்கூடிய நிலை வெளிப்படுவதாகத் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற நிலைப்பாட்டை எடுப்பதை கட்சிகள் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

சமூகத்திற்கான சேவை முக்கியம் என்பதைப் போலவே, சமூக நீதியும் முக்கியம் என்பதை நாம் உணர்ந்து அதை கடைப்பிடிக்க வேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடி வரும் இவ்வேளையில், முதல்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் நமது நாட்டின் குடியரசுத் தலைவராகி இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், அந்த வகையில் இந்த நாள் நமது நாட்டிற்கு மிகப் பெரிய நாள் என்றார்.

பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியின சமூகத்தவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் முன்னேற்றத்தில்தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கி இருப்பதாகத் தெரிவித்த பிரதமர், கல்விதான் முன்னேற்றத்திற்கான திறவுகோள் என்ற ஹர்மோகன் சிங் யாதவின் சிந்தனையை தமது அரசு முன்னெடுத்துச் செல்வதாகக் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.