ஒரு ஆட்சியை கட்டமைப்பது எளிது, ஆனால் ஒரு நாட்டை கட்டமைப்பது கடினம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்துகொண்டு பேசும்போது பிரதமர் இதனை தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு 100 சதவீதம் குழாய் மூலம் நேரிடையாக குடிநீர் வழங்கும் முதல் மாநிலம் என்கிற பெருமையை கோவா பெற்றுள்ளது. இதனைக்கொண்டாடும் விதமாக அம்மாநிலத் தலைநகர் பானாஜியில், நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டில் தற்போது கிராமப்புறங்களில் உள்ள 10 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் நேரடியாக தூய குடிநீர் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். ”ஜல் ஜீவன்” திட்டத்தின் கீழ் நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 7 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது சாதாரண சாதனை அல்ல என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் உள்ள 3 கோடி வீடுகளுக்கு மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 7 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டில் ராம்சர் அந்தஸ்து பெற்ற ஈர நிலங்களின் எண்ணிக்கை 75ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, இதில் 50 ஈர நிலங்கள் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ராமசர் அந்தஸ்தை பெற்றுள்ளன எனத் தெரிவித்தார். அந்த அளவிற்கு மத்திய அரசு குடிநீர் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மட்டங்களிலும் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டை பற்றி கவலைப்படாதவர்கள் நாட்டின் நிகழ்கால, மற்றும் எதிர்கால நலன்களைப் பொருட்படுத்தமாட்டார்கள் எனக் கூறிய பிரதமர் மோடி, அத்தகையவர்கள் குடிநீர் தொடர்பாக பெரும் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டு பின்னர் அதற்காக தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்மாட்டார்கள் என்று விமர்சித்தார்.
ஓரு ஆட்சியை எளிதில் கட்டமைத்துவிடலாம், ஆனால் ஒரு நாட்டைக் கட்டமைப்பது அவ்வளவு எளிதல்ல என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, அதற்காக கடின உழைப்பை வழங்க வேண்டும் என்றார். ஒரு நாட்டை கட்டமைக்கும் பாதையை தேர்ந்தெடுத்தே பயணிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.








